இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான்; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால் - எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால் - தனி ஈழம் அமைக்க தேவையான நடவடிக்கையை நான் எடுப்பேன். அதை நான் நிச்சயம் செய்வேன் என்று ஒரு பரபரப்பான வாக்குறுதியை அதிமுக தலைவர் செல்வி ஜெயலலிதா வழங்கியிருக்கின்றார்.
இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜெயலலிதா மேலும் தெரிவித்துள்ளதாவது:
வாழும் கலை, அமைப்பின் நிறுவனர், சிறீ சிறீ ரவிசங்கர் குருஜி தலைமையில், அவரது அமைப்பைச் சேர்ந்த குழுவினர், அண்மையில், சில நாட்களுக்கு முன்பு, இலங்கை சென்று, அங்குள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களோடு, உரையாடிவிட்டு வந்திருக்கின்றனர்.
இதுவரை, யாரும் செல்லாத பகுதிகளான, வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளுக்கு எல்லாம், அவர்கள் சென்று வந்து இருக்கின்றனர்.
எனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு இடையில், 23 ஆம் நாள் நான் சென்னை வந்த போது, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் சிறீ சிறீ ரவிசங்கர் குருஜி அவர்கள் என்னை சந்தித்தார்.
அப்போது அங்கே இலங்கை தமிழர்கள் படும் வேதனைகளை, இன்னல்களை, அவலங்களை எனக்கு எடுத்துரைத்தார். அதுமட்டும் அல்லாமல், அங்கே அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட காணொலிக் [Video] காட்சிகளை இலத்திரனியல் காணொலித் தட்டில் [DVD] எனக்கு திரையிட்டு காண்பித்தார்.
அந்த காட்சிகளை பார்த்து நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன வேதனை அடைந்தேன்.
இதுவரை தெரியாத பல உண்மைகளை, காணொலி காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டேன். இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரைக் காரணமாக கொண்டு, இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பெய்து, அவர்களை அழித்து வருகிறது என்பது மட்டும் தான் நம் அனைவருக்கும் தெரியும். அதனால், தொடர்ந்து போர் நிறுத்தம் தேவை என்பதை மனிதாபிமானம் மிக்க நாம் அனைவரும் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், இந்த காணொலி காட்சிகளை பார்த்த பிறகு தான், இலங்கை தமிழர்கள் அங்கே கைதிகளை போல், அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது.
இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது.
அப்படி என்ன கொடுமைக்கு இலங்கை தமிழர்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய், பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன்.
உண்மை நிலை என்னவென்றால், இலங்கை தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் எல்லாம் அவர்களை வெளியேறச் சொல்லி இலங்கை இராணுவம் உத்தரவிடுகிறது.
வீட்டில் உள்ள பொருட்களை, துணிமணிகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, கட்டிய துணியோடு, மாற்று துணிக்கு வழியில்லாமல் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு இலங்கை தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இப்படி வெளியேறுகின்ற இலங்கை தமிழர்களை, இலங்கை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கிறது.
நிழலுக்கு மரங்கள் கூட இல்லாத இடத்தில், பாலைவனத்தில், கட்டாந் தரையில் இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். புல்பூண்டு கூட அந்த இடங்களில் கிடையாது. அனைத்தும் தகர கொட்டகை போட்ட முகாம்கள்.
இந்த முகாம்களை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்தான் இவர்கள் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் முகாம்களை விட்டு வெளியே செல்ல இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
வேறு இடங்களில் உள்ள இவர்களுடைய உறவினர்கள், இவர்களை பார்க்கச்சென்றால் கூட, முகாம்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முள்வேலிக்கு வெளியில் இருந்து தான் அவர்கள் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களது எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன.
கைதிகளைப் போல் அவர்கள் அங்கே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?... அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?... அவர்கள் என்ன குற்றவாளிகளா?... இதுபோன்று, அவர்களை நடத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது?...
குற்றம் புரிந்து, தண்டனை பெற்ற கைதிகளைக் கூட, அவர்களது உறவினர்கள், சிறைச்சாலைக்கு உள்ளே சென்று, பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு குற்றமும் புரியாத இலங்கை தமிழர்களை, அவர்களது உறவினர்கள் யாரும், உள்ளே சென்று, பார்க்கக் கூடாது என்று கூறுவது, எந்த விதத்தில் நியாயம்?
இதையெல்லாம் பார்க்கின்ற போது, ஜெர்மனியில் நடந்த ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான் - தடுப்பு வதை முகாம்களை [Concentration Camps] நடத்தி, யூதர்களைக் கொடுமைப்படுத்தி அழித்த - ஹிட்லர் ஆட்சி தான், நினைவிற்கு வருகிறது.
இலங்கைத் தலைநகரமான கொழும்பில், 50-க்கும் மேற்பட்ட நல்ல நிலைமையில் இருந்த தமிழர்களை - மருத்துவர்களை, வியாபாரம் செய்பவர்களை - இரவோடு இரவாக, இலங்கை இராணுவத்தினர், வெளியேற்றி உள்ளனர். வீடு, வாசல், சொத்துக்கள், பொருட்கள் என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கட்டிய துணியுடன், மாற்று துணிக்குக் கூட வழியில்லாமல் பிச்சைக்காரர்களைப் போல், வவுனியா முகாம்களில், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களுக்கு எல்லாம், குருஜி அவர்கள், துணிமணிகளை கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் குருஜியிடம், என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், "எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் எங்கு தங்கி இருந்தோமோ, அங்கு எங்களை அனுப்பிவிடுங்கள்'' என்று மன்றாடி இருக்கிறார்கள்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது, சிங்கள மக்களை குடும்பம் குடும்பமாக குடி அமர்த்துகிறது.
இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால் தீட்டப்பட்டு இருக்கும் மிக கொடுமையான திட்டம் இது. "முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள், பிச்சைக்காரர்களைப் போல் நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே அனுப்பி வையுங்கள்,'' என்று இலங்கை அதிபரிடம் குருஜி அவர்கள் கேட்டதற்கு, "இப்போதைக்கு அது முடியாது'' என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
"இரண்டு மாதங்கள் கழித்தாவது அனுப்பி வையுங்கள்'' என்று கேட்டதற்கு, "அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், "அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்'' என்றும், "எனவே, அதற்கு பிறகு தான் அங்கு அவர்களை அனுப்ப முடியும்'' என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாக குடியமர்த்தப்பட்ட சிங்களவர்கள் வசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல் கண்ணிவெடிகள் அங்கே இருந்தால், சிங்களவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?... அந்த கண்ணிவெடிகள், இலங்கை தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால் தான் வெடிக்குமா?... சிங்களவர்கள் நடந்தால் வெடிக்காதா?...
இலங்கை இராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களை, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் எண்ணமே இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை அரசு நடத்தும் முகாம்களிலேயே கைதிகளைப் போல் - அடிமைகளைப் போல் - அடைத்து வைத்து, எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் அவர்களையும் அழித்துவிடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது.
உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை; அது வெறும் கண்துடைப்பு என்பது தெரிகிறது.
இலங்கை தமிழர்களுக்கு, சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது.
இலங்கையில் தமிழினம் அழிவதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், தி.மு.க. அரசும் தான் காரணம். இவர்கள் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலை நிறுத்தம் அனைத்தும் கண்துடைப்பு நாடகங்கள் தான். தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற இதுபோன்ற அறிவிப்புகளை செய்கிறார்கள்.
இந்திய அரசின் இரு தூதுவர்களும் இலங்கை அதிபரை தற்போது சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். என்ன சாதித்தார்கள்?... இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது?... எதுவுமே இல்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் போதாது; இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.
இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்.
இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
No comments:
Post a Comment